குரு கடாக்ஷமமும் உபதேசமும்
எனக்கு ஏன் விஷ்ணு சகஸ்ரநாமத்தின்மீது அலாதிப் பற்று? அதை ஏன் தினமும் சொல்லுகிறேன்?
“கரணம் காரணம் கர்த்தா யார்”
1957-களில் 10 வயது சிறுவனாகக் காஞ்சி மடத்தின் வேத பாடசாலையில் மாலை வகுப்பில் ஶ்ரீ பி. என். நாராயணச் ரௌதிகள் என்ற குருவின் தலைமையில் விஷ்ணு சகஸ்ரநாமம், மூகபஞ்சசதி, அமரம் போன்றவைகளை கற்றுக்கொண்டிருந்த காலம்.
குரு என்பவர் யார்? யார் நம்மை ஆச்சாரியனிடத்தில் கொண்டு சேர்க்கிறாரோ அவர்தான் குரு. என்னை மஹாபெரியவாளிடத்தில் கொண்டு சேர்த்த உத்தம குருதான் அவர். அப்போது மஹாபெரியவர் புதுப்பெரியவாளோடு தி.நகரில் ராமேஸ்வரம் ரோடில் உள்ள கல்யாணராமைய்யரின் கல்யாண் பாக்கில் தங்கியிருந்து தினமும் பூஜை, அருளாசி வழங்கிக் கொண்டு இருந்தார். தினமும் மாலை வேளைகளில் வகுப்பு எங்களுக்கு அங்கேதான். நாங்கள் அத்யாணம் செய்து கொண்டு இருக்கும்போது மஹாபெரியவா அந்த வீட்டில் இருக்கும் ஒரு அறையில் தங்கி அனவருக்கும் தரிசனம் அளிப்பார்.
மாலை பூஜை வேளை சமயத்தில் அறையிலிருந்து கிளம்பி நாங்கள் இருக்கும் இடத்தின் வழியாக பூஜாமண்டபத்துக்கு கடந்து செல்வார். நாங்களும் அவர் வரும்போது எழுந்து நின்று தோடகாஷ்டகம் சொல்வோம் அவரும் இருந்து கேட்டு முடிந்தவுடன் ஆசி வழங்கிவிட்டுச் செல்வார். இது தினமும் வாடிக்கை.
அன்று பௌர்ணமி விசேஷம். மஹாபெரியாவா விசேஷபூஜை. எங்கள் குருவான ஶ்ரீ நாறாயண ச்ரௌதிகளுக்கு மஹாபெரியவா லலிதா சகஸ்ரநாமம் திரிசதி போன்றவற்றை பூஜாமண்டபத்தின் அருகில் அமரந்து ஜபிக்க உத்தரவு ஆகி இருந்தது எனவே அவர் இதுவரை கற்றதை சொல்லுமாறு பணித்துவிட்டு ஜபம் செய்ய போய்விட்டார்.
நாங்களும் சரியாக 6 மணிக்கு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தோம். கணேஸ பஞ்ச ரத்னம் முதல் தோடகாஷ்டகம் வரை சொல்லிவிட்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் இதுவரை சொல்லிக்கொடுத்த 19 ஸ்லோகங்களை சொல்ல ஆராம்பித்தோம். அப்பொழுது மஹாபெரியவா பூஜைக்குச் செல்ல எங்களை கடந்து சென்றார். அவரைப் பார்த்த உடன் நாங்கள் எழுந்து நின்று குருபிரும்மா குரு விஷ்ணு ஸ்லோகம் சொல்லி நமஸ்காரம் செய்தோம்.
என்ன தோன்றியதோ அவருக்கு. சற்று நின்று எங்களைப் பார்த்து, “இப்போ என்ன பாடம் நடந்துண்டு இருக்கு?”
நாங்கள்: விஷ்ணு சகஸரநாமம் 19 ஸ்லோகம் ஆயிருக்கு.
பெரியவா: ஒரு நாளைக்கு எவ்வளவு புதுசா சொல்லித்தருவா ஸ்ரவுதிகள்?
நாங்கள்: நான்கு.
பெரியவா: அப்போ இன்னிக்கி 20-லேந்து 23 வரை கத்துக்கனும் இல்லையா?
அப்போது பௌர்ணமி பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் காத்துண்டு இருந்தார்கள். கூட வந்த சிஷ்யர்களும் பூஜைக்கு நேரமாகியதை நினைவு படுத்தினார்கள்.
பெரியவா திடீரென்று எங்களைப் பார்த்து “நான் சொல்லறேன் நீங்கோ மூனு தரம் சந்தை சொல்லுங்கோ”
“மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா”
நாங்கள் அதை வாங்கி, “மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா”, ”மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா”, “மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா” என்று மூன்றுமுறை திருப்பிச் சொன்னோம். இதே மாதிரி 20 முதல் 23 வரை உள்ள ஸ்லோகங்களை பெரியவா சொல்லிக் கொடுத்தார்.
அஹோ பாக்யம் அஹோ பாக்யம். அதன் பிறகுதான் பூஜைக்கு கிளம்பிச்சென்றார்.
அவர் சொல்லிகொடுத்த ஸ்லோகங்கள்:
மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || 20
மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || 21
அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா || 22
குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || 23
அதுவும் 23 ஆவது ஸ்லோகமான
குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || 23
ஜகத்குருவின் மூலமாக அவரிடமிருந்தே அன்று எங்களுக்கு குரு கடாக்ஷம் மட்டுமல்ல குரு உபதேசமும் கிடைத்தது எங்கள் பாக்யம். இப்போது தெரிகிறதா நான் ஏன் விஷ்ணு சகஸ்ரநாமத்தின் மீது இவ்வளவு பக்தி கொண்டு தினமும் பாராயணம் செய்து வருகிறேன் என்று.
சந்த்ரஶேகரரமண தேபதே|
பக்திரஸ்துமே வந்தனம் தவ ||
ஹே சந்த்ரசேகர குருவே. எங்களை காக்கும் தெய்வமே. உங்கள்மீது எனக்கு அபார பக்தியைத் தாருங்கள். உங்களுக்கு என் நமஸ்காரம்.
